பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள் மீது தற்போது திமுக கரிசனப் பார்வை பார்ப்பது திமுக கூட்டணிக் கட்சிகளை திகிலடைய வைத்திருக்கிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகள் காங்கிரஸுக்கும், சாத்தூர் தொகுதி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரை தவிர்த்து மற்ற 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த முறை 7 தொகுதிகளையுமே திமுக கூட்டணியே கைப்பற்ற வேண்டும் என மாவட்டத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து, தற்போது மதிமுக வசம் உள்ள சாத்தூர் தொகுதியில் தனது மகனை களமிறக்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் காய் நகர்த்துகிறார். அதேபோல், சிவகாசியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றியது போல், எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி சிவகாசிக்கு விசிட் அடிக்கிறார் மாவட்டத்தின் இன்னொரு அமைச்சரான தங்கம் தென்னரசு. சிவகாசிக்கான திமுக வேட்பாளரை அவர் முடிவு செய்துவிட்டதாக திமுகவினர் கசியவிடும் செய்திகளால் கதர் பார்ட்டிகள் கலங்கிக் கிடக்கிறார்கள்.
இதேபோல், கடந்த முறை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இம்முறை திமுகவே போட்டியிடலாம். அதற்குப் பதிலாக இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.திமுகவின் இந்த மூவ் சிவகாசியில் மீண்டும் போட்டியிட விரும்பும் காங்கிரஸுக்கும், சாத்தூரை தக்கவைக்க விரும்பும் மதிமுகவுக்கும், ராஜபாளையம் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் கிடைக்குமா என எதிர்நோக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.