விருதுநகர்: நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் குறைகளையும் அதற்கான தீர்வுகளையும் கேட்டறிந்து வருகிறார். அதன்படி, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி முதல் 2 மணி வரை ஆமத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அப்பகுதி பொதுமக்களின் குறைகள் மற்றும் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால், காவல்துறை அணுமதி அளித்த நேரத்தை கடந்து நள்ளிரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் குணம், வெள்ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மீது ஆமத்தூர் போலீஸார் இன்று வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.