தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டம் பல ஏழை, எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், சில பாதைகளில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசல் காரணமாக இத்திட்டத்தின் பயன் சற்றே குறைந்து வருகிறது.
குறிப்பாக, விருதுநகர் முதல் அருப்புக்கோட்டை வரையிலான பாதையில் காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மாணவர்களையும் பொதுப்பயணிகளையும் பெரிதும் சிரமப்படுத்தி வருகிறது.
இலவசப் பேருந்துத் திட்டம் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்துகள் நிரம்பி வழிவதால் பலர் தொங்கிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
சில நிறுத்தங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என்பதும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சில சமயம் கடுமையாக நடந்துகொள்வதும் புகார்களாக எழுந்துள்ளன.

பயணிகளின் குரல்கள்:
ராம் (கல்லூரி மாணவர்): “காலையில் 8 மணிக்கு பேருந்து வந்தாலே உள்ளே இடமே இருக்காது. ஆண் மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.”
தர்ஷினி (பள்ளி மாணவி): “மாலை 5 மணிக்கு பேருந்து ஏறினால் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நிறுத்தங்களில் நிறுத்தவே மாட்டார்கள். நடத்துநர் “ஏறு, ஏறு’ என்று கத்துவார். மிகவும் கஷ்டமாக உள்ளது”