விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை பார்த்து திமுக பதற்றப்படுகிறது. திமுகவினர் போலி வாக்காளர்களை நம்பி தான் தேர்தலில் நிற்க முடியும்.
அதிமுகவுக்கு யாரைக் கண்டும் பயம் கிடையாது. மக்களுக்கு மட்டுமே பயப்படுவோம். ஆனால், திமுக எதை கண்டாலும் பயப்படுகிறது. திமுக-வினர் ஆட்சி அதிகாரம் பறிபோகப் போகிறது என்ற ஆதங்கத்தில் பழியை தேர்தல் ஆணையத்தின் மீது போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
தற்போது பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் அதிமுக பத்திரமாக இருக்கிறது. அவரை ஏமாற்றிவிடலாம், ஒழித்து விடலாம் என்று சில சதி காரர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அந்த சூழ்ச்சிகளை எல்லாம் அடித்து நொறுக்கி பவுர்ணமி நிலவாக ஒளிர்கிறார் பழனிசாமி.
அதிமுக தேசபக்தி உள்ள இயக்கம். பொதுச் செயலாளர் பழனிசாமி ஒரு தேசபக்தர். நாட்டை பாதுகாக்கிற தலைவர் நரேந்திர மோடி. பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? இதுதான் ஆன்மீக பலம் பொருந்திய கூட்டணி.
திமுகவினர் டெல்லிக்கு சென்றால் பாஜகவுடன் உறவு, அதுவே சென்னைக்கு வந்தால் பகைபோல் வேஷம் போடுகின்றனர். திமுகவுக்கு வாக்களித்த சிறுபான்மையின மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். பாஜக உள்ளே வந்து விடும் என திமுக மக்களை பயமுறுத்தி ஏமாற்றி வருகிறது. பாஜகவில் உள்ளவர்கள் என்ன வெளிநாட்டினரா? நமது சகோதர்கள். வேறுபாட்டை புகுத்தி குழப்பத்தை உருவாக்கி வெற்றிபெற நினைக்கிற திமுகவின் சதி செயலை வரும் 2026 தேர்தலில் முறியடிப்போம்.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும். இத்தொகுதி கூட்டணி கட்சிக்கு போய்விடும் என்று பயப்பட வேண்டாம். இது வெற்றி பெறக்கூடிய தொகுதி. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.