சுதந்திரப் போராட்ட காலத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. விடுதலை வீரர்களைச் சுட்டு வீழ்த்த ஆங்கிலேயே காவல்காரர்கள் துப்பாக்கியோடு ஓடிவந்தனர். அப்போது வீரர்கள் தப்பிக்க இந்தக் கோயிலுக்குள் சரணடைந்து ஐயனாரை வேண்டினர். ஆனாலும் விடாமல் துரத்திய ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கடந்தால் கோயிலில் இருக்கும் விடுதலைப் போராட்டக் காரர்களைச் சுட்டுவிடலாம் என்னும் நிலை. அப்போது ஆற்றில் நீர் திடீரெனப் பெருக்கெடுத்தது. வெள்ளத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்து ஓரடி பின்வாங்கினர். அடுத்த கணம் அந்த வெள்ளத்தில் நீரோடு நீராகவே வெள்ளைக் குதிரையில் ஐயனார் காட்சி கொடுக்க ஆங்கிலேயர்கள் மிரண்டு போனார்கள். அடுத்த கணம் கீழே விழுந்து அவரைத் தொழுது அங்கிருந்து தப்பி ஓடினர் என்னும் சம்பவத்தை ஊர்க்காரர்கள் உணர்ச்சிபொங்க சொல்கிறார்கள்.
இப்படித் தன்னைத் தஞ்சம் என்று சரணடைந்தவர்களை எல்லாம் காக்கும் காவல் தெய்வமான நீர்காத்த ஐயனார், இன்றும் ஓடைக்கு அருகே வீற்றிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாகச் சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் அழகும் கம்பீரமும் கொண்டதாக விளங்குகிறது இந்தக் கோயில். வனலிங்க சாமி, தலைமை சாமி, பெருமாள், லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடன், மாடத்தி, ராக்காச்சி அம்மன், வனப் பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் என ஏகப்பட்ட தெய்வங்களின் ஊடே அமர்ந்திருக்கிறார் நம் ஐயனார்.
கருவறையில் முறுக்கு மீசையும் கலங்கடிக்கும் விழிகளும் கொண்டு ஐயனார் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார். குத்துவாளும் நீண்ட போர்வாளும் ஏந்தி, தலைப்பாகையும் தண்டமும் கொண்டு எழிலுடன் நிற்கிறார் ஐயனார்.