விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? – கொதிக்கும் ஆசிரியர்கள்!

Spread the love

இந்தியத் தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாகக் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கும் பணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 16,02,728 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் பேரில், மாணவர்கள் மூலம் தங்கள் வீட்டில் உள்ள வாக்காளர்கள் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டோம் என உறுதிமொழி வழங்கி கையொப்பமிட்டுப் பெற்றுத்தர பள்ளிக்கல்வித் துறை மாணவர்களைப் பயன்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பி, பணிகளை 100 சதவீதம் பூர்த்தி செய்ததாக நீதிமன்றத்தில் ஆவணப்படுத்த இந்த உறுதிமொழிப் படிவத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

எஸ்.ஐ.ஆர் பணி

இது குறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேஷ் கூறுகையில், “SIR படிவங்களை அந்தந்த பகுதியின் BLO-க்கள் கொடுத்து படிவங்களை நிரப்பித் திரும்பப் பெற வேண்டும். இந்தப் பணிகள் சில இடங்களில் தீவிரமாக நடக்கிறது. ஒரு சில இடங்களில் சுணக்கமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை 40% பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கு அர்த்தம், கொடுக்கப்பட்ட படிவங்களில் 40% படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அப்படியானால் இன்னும் 60% பணிகள் இன்னும் நடக்கவில்லை என்று அர்த்தம். இந்தச் சூழ்நிலையில் எங்களிடம் ஒரு படிவம் கொடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ‘என்னுடைய மாணவன் உங்கள் பள்ளியில் படிக்கிறான். எங்கள் வீட்டில் மொத்தம் இத்தனை வாக்குகள் இருக்கின்றன. நாங்கள் படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டோம்’ என்று இதன் மூலம் உறுதியளிக்கிறோம் என்று பெற்றோர்கள் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஆட்சியர் ஆய்வு

அப்படியானால் 60% பணிகள் முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லிக்கொள்ளும் நேரத்தில், ஒரு புறம் இப்படி ஒரு கையொப்பம் வாங்கச் சொல்கிறார்கள். அப்படி என்றால், படிவங்களைக் கொடுக்காமலேயே கொடுத்தோம் என்று கையொப்பம் வாங்குவதாக அர்த்தமாகிவிடுகிறது. வெளியூர் சென்றிருப்பது, மருத்துவக் காரணங்கள் என ஏதாவது ஒரு காரணங்களினால் அவர்களிடம் படிவங்கள் கிடைக்காமல் இருந்திருந்தால், இப்படிக் கையொப்பம் வாங்குவது, அவர்களிடம் படிவத்தைக் கொடுத்து நிரப்பி வாங்கியதற்குச் சமமாகிவிடும். பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது ‘உங்களிடம் படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, நீங்களும் நிரப்பிக் கொடுத்துவிட்டீர்கள்’ என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ‘இந்த வீட்டில் நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள்’ அல்லது ‘போலியான நபர்களாக இருப்பீர்கள்’ என்று கூறுவதற்கும், படிவங்களைத் தள்ளுபடி செய்வதற்கான பணியைத் தற்போது மேற்கொள்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *