சென்னை: அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்தியில் பாஜக கடந்த 2014-ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் இக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும், வரும் 26-ம் தேதி இரவு அல்லது 27-ம் தேதி காலை விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த சூழலில், மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவது இல்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாக, பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்போராட்டம் நடத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. ‘‘தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்’’ என்று கூறினீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியை காப்பாற்றுமே தவிர, இந்தியாவை காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும், தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.