இப்படிப்பட்ட சூழலில் வேளச்சேரியில இப்ப இருக்கிற எம்.எல்.ஏ மீது அதிருப்தி இருக்குனு கட்சி நிர்வாகிகள் மூலமாகவும் தொகுதி மக்கள் மூலமும் தெரியவந்தது. அதுவும் போக எல்லாரும் அரசியலுக்கு எதுக்கு வருவாங்க? பதவியில இருந்தா கூட நாலு நல்லதைச் செய்யாலாம்னுதானே. அந்த மாதிரிதான் நானும் விருப்ப மனு கொடுத்தேன்.
கட்சியில பதவிகள் தந்தாங்கதான். ஆனா அதிகாரமிக்க பதவிகள் இருந்தாதானே மக்களுக்குத் தேவைப்பட்டதை நாம செய்ய நினைக்கிற புது விஷயங்களைச் செய்ய முடியும். அதனாலதான் அந்தப் பதவிகளை விரும்பினேன்.
ஆனா பாருங்க, நான் கொடுத்த விருப்ப மனுவையே யார் முடிவெடுக்கணுமோ அவங்ககிட்ட போகும் போது திருத்தியிருக்காங்க. அதாவது ‘அமெரிக்கை’ நாராயணன்னா என்னை தேசிய அளவுல கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தெரியும். ஆனா ‘அமெரிக்கை’யைத் தூக்கிட்டு வெறும் வி.நாராயணன்னு போட்டு அனுப்பியிருக்காங்க.
யார் எதுக்கு பண்ணினாங்க தெரியலை. சம்பந்தப்பட்டவங்களுக்கே வெளிச்சம் இனி உட்கார்ந்து அதை ஆராய்ச்சி பண்ணி ஆகப்போவது ஒண்ணுமில்ல.
எல்லாருக்கும் எப்படி சீட் தருவாங்கனு கேட்டீங்க. நியாயமான கேள்விதான். ஆனா ஒரு முறை ரெண்டு முறை கேட்டிருந்தா பரவால்ல. நான் 17 தடவை கேட்டிருக்கேன்.
கஜினி முகமது 17 தடவை படையெடுத்தார்னு பள்ளியில படிச்சிருக்கோமே, அதேபோலத்தான் நானும் படையெடுத்தேன். 17 தேர்தல்ல ஒரேயொரு முறை தரலாமே?
ஆனா கிடைக்கலையேங்க.
மறைமலை நகரில் பேருந்து நிறுத்ததுக்கு காமராஜர் பெயர் வைக்கணும்னு நடந்த ஒரு போராட்டத்துல கலந்துகிட்டு 15 நாள் ஜெயில்ல இருந்தேன். அப்ப ஜெயில்ல என்னை அடிச்சாங்க.
இதெல்லாம் சொல்லிக் காட்டணும்கிறது என் விருப்பமில்லை. ஆனா இன்னைக்கு கட்சி மக்களுக்கு சேவை செய்கிறவர்களை எந்த இடத்துல வச்சிருக்குனு நினைச்சுப் பார்க்கிறப்ப வருத்தமா இருக்கு.. அதனால் சொல்ல வேண்டி இருக்கு” என்கிறார்.