விலங்குகள் தங்கள் குட்டிகளை உண்ணக் காரணம் என்ன?

Spread the love

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், “தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன. எனவே, இவை தங்கள் குட்டிகளை உண்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.​

ஆனால் மீன்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான முட்டைகளையோ, குட்டிகளையோ ஈனுகின்றன. இவற்றிடம் தான் இந்தப் பழக்கம் அதிகம் காணப்படுகிறது” என்கிறார்.

சில குட்டிகளை மட்டும் ஏன் உண்கின்றன?

சிலந்தி, மீன் மற்றும் பூச்சி இனங்களில் இது அதிகம் நடக்கிறது. குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைக்காத சூழலில், சில குட்டிகளைத் தாய் உண்பதன் மூலம், மீதமுள்ள குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது.​

நாய், பூனை மற்றும் பன்றி போன்ற விலங்குகள், தங்கள் குட்டிகளில் எவை பலவீனமாகவோ அல்லது இறந்து பிறந்தாலோ, அவற்றை உண்டுவிடும். பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை மீண்டும் பெறத் தாய் விலங்கு இப்படிச் செய்கிறது.​ மேலும் எலி மற்றும் முயல் போன்ற சிறிய பாலூட்டிகளில் இது அதிகம் காணப்படுவதாகவும் அனீஷ் கூறுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *