விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000: மகளிரை தொடர்ந்து முதியோர், மாற்றுதிறனாளிகள், மீனவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – Kumudam

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்ற நிதியுதவியை விளிம்புநிலை மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்று, முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குச் சிறப்பு நிதியாக தலா 2,000 ரூபாயை அரசு இன்று விடுவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! 

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐம், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐம், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ ரூ. 2,000 ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் – தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *