வளமான ‘விளைச்சல் கொடுக்கும்’ துறையை கையில் வைத்திருக்கும் விஐபிக்கு எதிராக சொந்த மாவட்டத்திலேயே சோக கீதம் பாடுகிறார்கள். மாவட்டத்தில் தானும் தனது வழித்தோன்றலும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ‘விளைச்சல்’ விஐபி, அதற்காக கட்சியின் 23 அணிகளின் நிர்வாகிகளையும் முடக்கியே வைத்திருக்கிறாராம். இதனால் நொந்து போயிருக்கும் உடன் பிறப்புக்கள், “பட்டா மட்டும் தான் எங்க பேருல இருக்கு… பயிர் பண்றது என்னவோ அவரு தான்” எனப் புலம்புகிறார்கள்.
தெருமுனை பிரச்சாரங்களை தீவிரப்படுத்த இளைஞரணி தலைமையிலிருந்து உத்தரவு வந்த பின்னாலும் ‘விளைச்சல்’ விஐபியின் பிர்காவுக்குள் எதுவும் நடக்கவில்லையாம். ஆர்வமுள்ள தம்பிகள் சிலர் போய்க் கேட்டதற்கு, “இருய்யா… இவரு போய்த்தான் அப்படியே கட்சிய தூக்கி நிமித்தப் போறாரு” என்று அடக்கி விட்டாராம். அரசு முறை ஒப்பந்தப் பணிகளைக் கூட உறவுகள் பார்த்தே தள்ளிவிடும் ‘தாராளம்’ படைத்த ‘விளைச்சல்’ விஐபி, கழகத்தினர் யாராவது போய்க் கேட்டால், காதுகூசும் வசனங்களால் ‘வாழ்த்தி’ அனுப்புகிறாராம்.
இதனிடையே, பாட்டாளிச் சொந்தங்கள் மீது தனிப்பட்ட பிரியம் வைத்திருக்கும் ‘விளைச்சல்’ விஐபி, இம்முறை அவர்களின் தயவுடன் தனது வழித்தோன்றலையும் ‘கிரி’ தொகுதியில் நிறுத்தி ஜெயிக்க வைக்க திட்டம் வகுத்திருக்கிறாராம். அத்துடன், தனது மாவட்டத்தில் தனது குடும்பத்தைத் தவிர யாரும் அதிகாரப் போட்டிக்கு வந்து நிற்கக்கூடாது என்பதால், கழகத்துக்கு வெற்றி வாய்ப்பிருந்தும் தனது மாவட்டத்தின் பிரதானமான மூன்று தொகுதிகளை கதர்களுக்கும் சிறுத்தைகளுக்கும், காம்ரேடுகளுக்கும் தாமாக முன்வந்து தாராள தானம் செய்துவிடும் முடிவிலும் இருக்கிறாராம்.