விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன உபகரணங்களுடன் விளையாட்டு அறிவியல் மையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் | Udhayanidhi Stalin inaugurates sports science center with modern equipment for healing injuries

1356988.jpg
Spread the love

சென்னை: விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன வகை உபகரணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படும் என கடந்த 2023-24 சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள சென்னை ஒலிம்பிக் அகாடமியின் மூன்றாவது தளத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பயிற்சிக்காகவும், விளையாட்டின் போது ஏற்படும் காயங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு குணப்படுத்துவதற்கும் தேவையான நவீன உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விளையாட்டு வீரர்கள் சர்வதேசத் தரத்தில் அறிவியல் ரீதியாக பயிற்சிகளைப் பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து தேனி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த அரங்கில் கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற விளையாட்டுகளை ஒரே நேரத்தில் 600 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள முதல்வர் சிறு விளையாட்டரங்கில் (மினி ஸ்டேடியம்) ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பளு தூக்கும் பயிற்சி மையத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *