விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக விருது: முதல்வரிடம் உதயநிதி வாழ்த்து | Awarded as the best state in promoting sports

1342199.jpg
Spread the love

சென்னை: டெல்லியில் நடைபெற்ற ‘பிக்கி’ சர்வதேச கருத்தரங்கில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத் திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தின் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.85.99 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலை போட்டிகளில் பங்கேற்பது, மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ.13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டை ஊக்குவிக்க மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதன்மூலம் விளையாட்டு துறையில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்திய வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு (FICCI) சார்பில், டெல்லியில் நடைபெற்ற 14-வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் வழங்கப்பட்ட இந்திய விளையாட்டு விருதுகளில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை அங்கீகரித்து விருதை வழங்கியது.

இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் முருகானந்தம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *