விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வந்த ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து காலை 9.5 மணிக்கு ஆட்சியர்தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. ப சரவணனுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.
பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, வனத்துறை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், இளம்செஞ்சிலுவைச் சங்கம், சாரண-சாரணீய இயக்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.