விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – நடந்தது என்ன? | Protestors throws mud at Minister Ponmudi and Collector near Villupuram

1342015.jpg
Spread the love

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் கரையோரங்களிலுள்ள சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பொய்கை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளப் பெருக்கால் குடியிருப்புகள், உடைமைகளை இழந்த தங்களுக்கு, மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டஅத்தியாவசியத் தேவைகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் வரவில்லை. நிவாரண உதவிகள் செய்யவில்லை எனக்கூறி, சுமார் 500-க்கும் மேற்பட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் உள்ளிட்டோர் வரும் வரை மறியலைக் கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறினர். இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ. மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இத்தகவலறிந்த மாநில வனத்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அங்கு வந்தனர்.

விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்றபோது, இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த சிலர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது தெறித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் விழுப்புரம் தீபக் ஸ்வாட்ச், திருவாரூர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.

கண்டிக்கதக்க நிகழ்வு: பொன்முடி மீதான சேற்றை வீசியது குறித்து சில அரசியல் கட்சியினரிடம் கேட்டபோது, “ஜனநாயக நாட்டில் தங்களின் உரிமைக்காக போராடுவது தவறில்லை. அதேநேரம் சக மனிதரை இழிவுபடித்துவதை ஏற்க முடியாது. சாலை மறியல், உண்ணாவிரதம், கருப்புக் கொடி காட்டுதல், தேர்தல் புறக்கணிப்பு என எதிர்ப்பை காட்ட பல்வேறு வழிகள் உள்ளது. ஆனால் இந்நிகழ்வை நாகரிக மனிதர்களால் ஏற்க முடியாது. இந்நிகழ்வு கண்டிக்கதக்கது,” என்றனர்.

அதேவேளையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், தமிழக அரசு மீதான பொதுமக்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது. திமுகவுக்கு விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு மென்மையான நினைவூட்டல்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். | வாசிக்க > “மக்களின் விரக்தி வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு” – அண்ணாமலை கருத்து

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *