விழுப்புரம்: புதுச்சேரி சாராயத்தைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் வீடு திரும்பியதாகவும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி வந்து பலர் குடித்து வருகின்றனர். அதன்படி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து ஜூலை 8-ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் குடித்துள்ளார்.
இந்நிலையில், ஜூலை 9ம் தேதி காலை சாராயத்தை குடித்து சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், காணிக்கைராஜ், பாபு, ராஜா, பிரகாஷ், பிரபு உள்ளிட்ட 6 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் சக்திவேல் தவிர மற்றவர்கள் வீடு திரும்பினர். சக்திவேலுவுக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், இன்று அதே ஊரைச் சேர்ந்த வேலு (55 ) என்பவர் புதுச்சேரி சாராயம் குடித்ததில் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானதால் 5 பேர் வீடு திரும்பினர் என்றும், இருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.