விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு சுமலதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
அதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் உட்பட பல மருத்துவமனைகளுக்குச் சென்றார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிகிச்சைகளை எடுத்து வந்திருக்கிறார். அப்படியும் அவருக்கு நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கண்டமங்கலத்திலுள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்த சுமலதா, அங்கேயே தங்கி சிகிச்சைகளை எடுத்து வந்திருக்கிறார்.
தினமும் காலையில் மனைவியுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்த கோதண்டராமன், கடந்த 19.01.2026 அன்று மனைவியை மட்டும் செல்லுமாறு கூறியிருக்கிறார். அப்போது சுமலதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென கோதண்டராமன் வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. காலையில் 7 மணி என்பதால் அந்த அலறல் சத்தம் தெரு முழுவதும் எதிரொலித்தது. அதனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கோதண்டராமன் வீட்டிற்கு ஓடிச் சென்றிருக்கின்றனர்.