விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா எனக்கு ரூ.4,000 ஃபீஸ்!’ – விவசாயி புகாரால் மின் துறை பெண் அதிகாரி கைது | Anti-Corruption Police have arrested officer took a bribe to provide an electricity connection

Spread the love

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டணை இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால், அதுகுறித்து இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்திலிருந்த அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்.

அப்போது அங்கு மின் வணிக ஆய்வாளராக இருந்த ரேகா என்ற பெண் அதிகாரி, `கரண்ட் வேணும்னா கவர்மெண்ட்டுக்கு கட்ற ஃபீஸ் இல்லாம, எனக்கு ரூ.4,000 ஃபீஸ் தரணும்’ என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய 4,000 ரூபாயை ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்தனுப்பினர்.

அந்தப் பணத்தை நேற்று 09.02.2026 மின் வணிக ஆய்வாளர் ரேகாவிடம் கொடுத்த ஹரிகிருஷ்ணன், தன்னுடைய வீட்டுக்கு விரைவாக மின் இணைப்பு வழங்குமாறு கூறியிருக்கிறார்.

ரேகா அந்தப் பணத்தை வாங்கிய சிறிது நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அந்த அலுவலகத்திற்கு அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது ரசாயனம் தடவிய பணம் வைத்திருந்த ரேகாவை உடனடியாகக் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *