விழுப்புரம்: தனியார் பள்ளி வகுப்பறையில் திடீரென பிளஸ் 1 மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மேல் தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி மகேஸ்வரி. கிராம உதவியாளர். இவரது மகன் மோகன்ராஜ் (16), திருவிக வீதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தினமும் காலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு வகுப்பில் மாணவர் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்ராஜ் மயங்கி கீழே விழுந்தார். தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற தாயார் மகேஸ்வரி, மகனை நேருஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவரைப் பரிசோதித்தபோது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, “என் மகனுக்கு எந்த நோயும் இல்லை. நன்றாகப் படிக்கும் மாணவன். 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 452 மதிப்பெண் பெற்றுள்ளான். தற்போது அவன் கொண்டு செல்லும் புத்தகப் பையின் சுமை அதிகம். இதை தூக்கிக் கொண்டு 4 மாடிக்கு படிக்கட்டில் ஏறிச் சென்றதால்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான், மாணவரின் மரணம் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்” என்று போலீஸார் தெரிவித்தனர். பிளஸ் 1 வகுப்புக்கு நடப்பாண்டிலேயே பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதும், அதில் பங்கேற்ற மாணவர் உயிரிழந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.