விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் ஜன.27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் வரும் ஜன.27 மற்றும் 28-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். விழுப்புரம் , வழுதரெட்டி பகுதியில் உள்ள ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம், சமூக நீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி ஆகியோர் இன்று (ஜன.25) ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியது: “முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம், இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தினை போற்றும் மணிமண்பட திறப்பு விழா மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வரும் 28-ம் தேதி வழங்குகிறார்.
முதல்வர் வருகை தரும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், திறப்பு விழா செய்யப்படவுள்ள பணிகளின் திட்ட விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ள பயனாளிகளின் விவரம், தமிழக அரசின் சாதனை விவரங்கள், விழாமேடை அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இணையதள வசதி, குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, தற்காலிக கழிவறை வசதி, தற்காலிக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிட வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,” என்றார். இந்த சந்திப்பின்போது, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், எஸ்பி சரவணன் லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயசந்திரன், முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வர் பங்கேற்கு நிகழ்ச்சி விவரம்: 27-ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில் திமுகவினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, திண்டிவனம் நகரின் மேம்பாலம் வழியாக ஜேவிஎஸ் திருமண மண்டபம் வரை நடந்துவந்து ( ரோட் ஷோ) பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து முதல்வர் மனுக்களை பெறுகிறார். பின்னர் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்வர் மறுநாள் 28-ம் தேதி காலை விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஏ. கோவிந்தசாமியின் நினைவரங்கம், சமூகநீதி போராளிகளை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் என்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.