விழுப்புரம் மாவட்டம், ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்: தொழிலில் நஷ்டம் விலகும்… ஆரோக்கியம் மேம்படும்!

Spread the love

பழைமை வாய்ந்த கோயில்கள் பலவற்றில் சூரியபகவானின் ஒளி குறிப்பிட்ட நாளில் கருவறையில் இருக்கும் மூர்த்தியின் மீது படும் விதமாக அமைந்திருக்கும். அப்படியான நாள்கள் சூரியபகவான் ஈசனை வழிபடும் காலங்கள் என்றும் அப்படிப்பட்ட ஈசனை வழிபட்டால் பித்ரு தோஷம் முதலான தோஷம் தீரும் என்றும் ஜாதகத்தில் சூரியபகவான் சாதகமாக இல்லாதவர்களுக்கு அருள் வழங்கும் தலம் என்றும் சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

அப்படி ஒரு தலம் தான் விழுப்புரம் மாவட்டம், ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில். திண்டிவனத்திலிருந்து பயணித்தால், கிளியனூரும் தைலாபுரமும் தாண்டிய பின்னர், ஒழிந்தியாப்பட்டு எனும் கைகாட்டியைப் பார்க்கலாம். அங்குள்ள கிளைப் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது.

இத்தலத்தில் வாமதேவர் எனும் ரிஷி ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார் என்கிறது தலவரலாறு. அரசமரத்தாடியில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த ஈசன் முனிவர் வழிபட்டு முக்தி அடைந்தார். இங்கு ஈசன் அரசமரத்தடியில் தோன்றியிருந்ததால் இந்தத் தலத்துக்கு அரசலி என்றும் ஈசனுக்கு அரசலீஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் வாய்த்தன என்கிறது தலபுராணம். காலவெள்ளத்தில் ஈசனின் ஆலயம் சிதைவுற்றது. அரசனும் மரத்தின் வேர்களால் சூழப்பட்டு மறைந்துகொண்டார்.

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்
ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்

பிற்காலத்தில் சாளுக்கிய மன்னனான சத்திய விரதனுக்கும் அருள் செய்தார் இந்த ஈசன். சத்தியவிரதனுக்குப் பிள்ளை இல்லை. எனவே அவன் தினமும் சிவபூஜை செய்துவந்தான். பூஜைக்கான மலர்களைப் பெற ஒரு நந்தவனத்தையும் அமைத்தான்.

ஒருநாள், நந்தவனத்தில் ஒரு பூ கூட இல்லை. அன்று மட்டும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மன்னன் இருப்பினும் பூக்கள் காணாமல் போனதற்கான காரணத்தை அறிய, மறுநாள் காவலாளிகளுடன் நந்தவனத்துக்குச் சென்றான்.

அப்போது மான் ஒன்று நந்தவனத்துக்குள் நுழைந்து பூக்களை உண்ண ஆரம்பித்தது. கோபம் கொண்ட மன்னன் அம்பு தொடுத்தான். மானோ நாண் ஏற்றும் சத்தத்திலேயே விழிப்படைந்தது ஓடிச் சென்று அரசமரப் பொந்தில் ஒளிந்துகொண்டது. மன்னன் எய்த அம்பு மரத்தின் பொந்தில் தைக்க அதில் இருந்து குருதி வழிந்தோடியது.

மான் இறந்துவிட்டது என்று நினைத்து அருகில் சென்று பார்த்தான் சத்தியவிரதன், அங்கே மான் இல்லை; சிவலிங்கம் ஒன்றின் மீது அம்பு தைத்து அதிலிருந்து குருதி வழிந்தது. மன்னன் நடுங்கிப்பொனான். ஈசனின் திருமேனியைத் தழுவி அழுது புலம்பினான். அப்போது ஈசன் அவனுக்குக் காட்சி கொடுத்து

“மானாக வந்தது நானே” என்று அருளியதோடு, மன்னனுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்று வாக்கு அளித்து மறைந்தார். சத்திய விரதன் மனம் மகிழ்ந்தான். அந்த இடத்திலேயே மாபெரும் ஆலயம் ஒன்றைக் கட்டினான்.

மூன்று நிலை கிழக்கு ராஜ கோபுரமே கோயிலின் பிரதான வாயில். கோபுரத்தை அடுத்து, மதிலின் உட்புறத்தில், தெற்குப் பக்கத்தில் சூரியனும், வடக்குப் பக்கத்தில் பைரவரும் மூலவர் சந்நிதியைப் பார்த்தபடி உள்ளார்கள்.

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்
ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்

உள்ளே நுழைந்தவுடன், கோபுரத்துக்கு எதிரில், ஒரு மண்டபம். பலிபீடமும், கொடிமரமும், நந்தியும் உள்ளன. நந்திக்கு முன்பாகச் சுவரில் ஒரு சாளரம். சாளரம் வழியாக உள்ளே எழுந்தருளியிருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம்.

இந்தச் சுவாமிக்கு அரசிலீஸ்வரர், அச்வதேஸ்வரர் (அச்வதா மரம் – அரச மரம்) என்றும் திருநாமங்கள் உண்டு. கல்வெட்டுகளில் `அரசிலி ஆளுடையார்’ என்றும் `அரசிலி ஆலாலசுந்தரர்’ என்றும் இந்தச் சுவாமியின் பெயர் காணப்படுகின்றன.

குட்டையான ஆவுடையாரின் மீது குட்டையான பாணம். 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த பந்தலின் கீழ், சிறிய சுயம்புலிங்க மூர்த்தியாக அருளும் ஈசனைத் தரிசிக்கும் கணத்தில், நம் மனம் லேசாகிவிடுகிறது.

மன்னன் சத்தியவிரதனின் அம்பு உண்டாக்கிய வடு, இன்றளவும் லிங்கத் திருமேனியில் காணப்படுகிறதாம். அதை மறைக்கும்விதம் தலைப்பாகை அலங்காரத்துடன் திகழ்கிறார் அரசிலிநாதர். தொழிலில் தடைகள், பிரச்னைகள், நஷ்டம் ஆகிய பிரச்னைகளால் தவிக்கும் அன்பர்களும் பதவி இழந்தோரும் இந்தக் கோயிலுக்குச் சென்று அரசமர இலைகளால் மூலவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் பலன் கிடைக்கும்.

வருடம்தோறும் பங்குனி கடைசி வாரத்தில் காலை 6 மணியளவில், சுமார் 2 நிமிடங்கள் வரையிலும் சூரியன் தன் கிரணங்களால் இந்த இறைவனை வழிபடும் காட்சி அற்புதமானது என்கிறார்கள் பக்தர்கள். எனவே இந்த ஈசனை வழிபட்டால் சூரிய தோஷம் விலகும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். மேலும் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் நந்தி மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தரும் அம்மனுக்குப் பெரியநாயகி என்றும் அழகியநாயகி என்றும் திருநாமங்கள். அம்மனை வழிபட்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர்

கருவறைக் கோஷ்டத்தில் தெற்குமுகம் நோக்கி அருள்கிறார் தட்சிணாமூர்த்தி. அவருக்கும் சற்று மேலே ஆனந்த தாண்டவர். மிகவும் அபூர்வ தரிசனம் இது. கோஷ்ட சுவர்களில் பற்பலக் கல்வெட்டுகள். இந்த ஊரைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளில், ‘ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஓய்மானாட்டு அரசிலி’ என்றும் ‘ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஒழுகறை’ என்றும் பெயர்க் குறிப்புகள் உள்ளன.

பிராகார வலத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர், வள்ளி – தெய்வானை சமேத ஆறுமுகர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், நடராஜமூர்த்தி, நால்வர் பெருமக்கள் ஆகியோரை தரிசிக்கலாம். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை அரசலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சகல வரங்கள் கிடைக்கப்பெற்று ஆனந்த வாழ்வு பெறுவீர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *