விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் விழுப்புரம் – திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி – திண்டிவனம் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது.
இதனால் இன்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள், அதிலிருந்து இறங்கி பேருந்து நிலையம் நோக்கிச் சென்றதால் பேருந்து நிலையத்திலும் ஏராளமான கூட்டம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரயில் பாதை சரி செய்யப்பட்டு ஒவ்வொரு ரயிலாக புறப்படத் துவங்கியுள்ளன.
முதல் கட்டமாக நெல்லை மற்றும் அனந்தபுரி ரயில்கள் புறப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் இருந்து சென்னை இடையே உள்ள ரயில் பாதை சரி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ரயிலாக சென்னை நோக்கி புறப்படத் துவங்கியுள்ளது.
ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும், பேருந்தில் செல்லலாம் என்று பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளும் ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். வழியில் ரயல்கள் நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான பயணிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.