விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

Spread the love

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை” சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான ‘உழவர் விருதுகள் 2026’கான விழா சென்னையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு துணை நிற்கவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இந்த அமைப்பு.

இந்த அமைப்பில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு. சிவராமன் உள்பட பலரும் உள்ளனர். ”சினிமாவைத் தாண்டி நெருக்கமாக ஏதேனும் ஒரு துறையில் செயல்பட வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனை எழுந்தபோது, ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகே பிறகே ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை தொடங்கினோம்.” என்று கார்த்தியும் சொல்லியிருக்கிறார்.

இந்த விழாவில் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும், ஓவியருமான சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் என திரையுலக பிரமுகர்களும் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டதுடன், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

விழாவின் ஹைலைட்டாக கார்த்தி பேசினார் “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்று பேசியிருக்கிறார்.

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு திரைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *