விவசாயியை தாக்கிய உதவி ஆய்வாளருக்கு, மனித உரிமைகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கஸ்பார் வில்லியம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு செப்.23-ம் தேதி எங்களது விவசாய நிலத்தை சேதப்படுத்தி, தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று பாதை போட்டிருந்தது. இதை எங்கள் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் ஞானப்பிரகாசம் உதவியோடு அந்நிறுவனம் செய்த நிலையில், இதுதொடர்பாக சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்தேன். 3 மாத காலமாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், இரண்டு முறை காவல் கண்காணிப்பாளரிடமும் புகாரளித்தேன்.
பின்னர், ஆய்வாளர் அழைத்ததன்பேரில் காவல் நிலையம் செல்லும் வழியில் நின்றிருந்த உதவி ஆய்வாளர், கண்காணிப்பாளரிடம் புகாரளித்ததை குறிப்பிட்டு என்னை மிரட்டினார். காற்றாலை இயந்திரங்களை கொண்டு செல்லும் லாரியை வழிமறித்து தகராறு செய்ததாக பொய்ப் புகார் பெற்று, காவல் நிலையத்துக்கு வரவழைத்து உதவி ஆய்வாளர் சுதன் என்னை கடுமையாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை உதவி ஆய்வாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவில் பரிந்துரைத்துள்ளார்.