சென்னை: விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கிராமங்களில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு ஒரே வழித்தடத்தில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தினசரி 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
விவசாயத்துக்கான மின்சாரத்தை சிலர் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துவதால், அந்த வழித்தடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயத்துக்கு தனி வழித்தடங்களில் மின்சாரம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் 6,200 கிராம மின் வழித்தடங்களில் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. அதில், 30 சதவீதத்துக்கும் அதிகமான விவசாய மின்இணைப்புகள் உள்ள 1,685 வழித்தடங்களை மட்டும் விவசாயத்துக்கான தனி வழித்தடமாக அமைக்கும் பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதனால், மின்னழுத்த பிரச்சினை ஏற்படாது. அத்துடன், மின் இழப்பும் குறையும் என்பதால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும்.
மாவட்ட வாரியாக திருவண்ணாமலையில் 174, தஞ்சையில் 109, திருப்பூரில் 80, புதுக்கோட்டையில் 75, கோவையில் 74 என இந்த மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயத்துக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும். பகலில் சூரியசக்தி மின்சாரம் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, சூரியசக்தி மின்சாரத்தை விவசாய வழித்தடங்களுக்கு விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.