கண்கலங்க வைக்கும் காட்சிகள்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (20-ந்தேதி) 42 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 பெண்களும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் இறந்தவர்கள் உடல்களை வைத்து உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியை பார்க்கவே கண்கலங்கியது.
மரண ஓலம்
மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுமார் 100&க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பலரது நிலைமையும் மோசமாக உள்ளதால் உறவினர்கள் பயத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இதற்கிடையே பலரது உயிரை காவுவாங்கிய கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசார், மாவட்ட நிர்வாகம் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். மாவட்ட கலெக்டர், எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கள்ளச்சாராயம் பலி தொடர்பாக விசார¬ணை நடத்த விசாரணை கமிஷனுக்கு முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
இன்று மதியம் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். மேலும் நிவாரண உதவித்தொகையும் வழங்கினர்.
இதேபோல் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சசிகலா,பிரேமலதா உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல்தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று மாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.
நடிகர் விஜய்
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாகநடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் அரசின் செயல்பாட்டை கடுமையாக சாடி இருந்தார். அந்த பதிவில் “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25-க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
21 உடல்கள் தகனம்
இதற்கிடையே பலியானவர்களின் 21 பேரின் உடல்கள் இன்று ஒன்றாக ஒரே இடத்தில் அடுக்கி வைத்து எரிக்கப்பட்டது. அப்போது மழை வந்ததால் உடல்களை எரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனை கண்டு அங்கு திரண்டு இருந்த பலியானவர்களின் உறவினர்கள் கதறிதுடித்தனர். 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டது. இதனால் கருணாபுரம் பகுதியே மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்பவர்கள் கண்கள் குளமாகி மனதை கனக்கச்செய்து உள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிரச்செய்து உள்ளது.
உள்துறை முதன்மை செயலாளர்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார். அப்போது, தாய் – தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். மேலும் விஷ சாராயம் விவகாரம் குறித்து உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷசாராய பலியில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் வருகிற 24&ந்தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்: