சென்னை: கிறிஸ்தவர்கள், விஸ்வகர்மா திட்டம் குறித்த துணை முதல்வர் உதயநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடுத்த அறிக்கையில், “அண்மையில் சென்னை சேத்துப்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, கிறிஸ்தவர்கள் பங்களிப்பால்தான் சமூக நீதி தமிழகத்தில் வாழ்கிறது என்றும், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி குலக்கல்வியை ஏற்படுத்த மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய், புரட்டு மற்றும் அநாகரிகமான பேச்சு. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் இருந்தன. அதில் அனைத்து சமூக மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கல்வி கற்றுத்தரப்பட்டது என்பது குறித்து மகாத்மா காந்தியின் சீடர் தரம்பால், ‘அழகிய மரம்’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும் அந்த புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும். மகாகவி பாரதியார் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என பெருமையாக பாடியுள்ளார். ஆனால் திமுகவினரோ ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்தான் எழுதப் படிக்க சொல்லித் தந்தார்கள் என கூறி, தமிழனுக்கு இழிவை தேடித் தருகின்றனர்.
விஸ்வகர்மா என்பது படைப்பின் திறமையை குறிப்பது. ஆனால், திமுகவினரோ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி என இகழ்ந்து அப்பட்டமாக புரட்டு பேசுகின்றனர். தமிழர்கள் இன்னமும் ஏமாளிகளாக இருப்பார்கள் என்று திமுக தலைவர்கள் கனவு காண வேண்டாம். எனவே, வரலாறு தெரியாமல் கிறிஸ்தவ மிஷனரிகளை பாராட்டி தமிழனுக்கு முட்டாள் பட்டம் கட்டுவதை உதயநிதி ஸ்டாலினும், திமுகவினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். விஸ்வகர்மா எனும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.