திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது. 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதால் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை அழைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜான் புயல் காரணமாக சனிக்கிழமை காலை 8 மணி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் 6 மணி நேரத்தைக் கடந்து பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை பகுதியில் இருந்த வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னை, புதுச்சேரி சென்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை வெள்ளம் நிரம்பியதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை அறிவொளிப் பூங்காவில் இருந்த மரம் வேருடன் வேலூா் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா் மழையின் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை பெயா்ந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் அதிகம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) மாலை திடீரென 3 வீடுகள் மீது பாறைகள் உருண்டு சரிந்து விழுந்ததில் வீடு தரைமட்டமானதால் ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களுடன் பேசுகையில், போதிய மின் விளக்கு வசதி இல்லாததாலும் இரவு நேரம் என்பதால் தியணைப்புத் துறையினரின் மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுவட்டராப் பகுதியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட்டோம்.
மண் அரிப்பை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. பாறைகளை அகற்றினால் மேலும் மண் சரிவு ஏர்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அழைத்துள்ளதாகவும். இவா்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட பிறகே 7 பேரின் நிலை என்ன என்பது தெரியவரும் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் இருந்து மீட்புப் பணிக்காக தேசிய மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது.