சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: ”ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவரும், பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு நல்லாட்சி தந்த மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தூக்கு மேடையில் நின்ற போதும் தன் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதாகக் கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.