வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court orders government to release Rs 2 crore compensation in Veerappan case

Spread the love

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட 38 பேருக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 79 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், இரண்டாவது தவணையாக ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எட்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இழப்பீடு தொகை வழங்கினாலும், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என சுட்டிக்காட்டினர். பாக்கி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

பின்னர், 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட 2 கோடியே 41 லட்சம் ரூபாய் போக, மீதமுள்ள 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை, டிசம்பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 கோடியே 59 லட்சம் ரூபாய் வழங்குவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தொழில்துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தொடரலாமே தவிர, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எதிராக வழக்கு தொடலாமா எனவும் கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மக்களின் பணம். அரசுப் பணம் அல்ல. மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *