சென்னை: வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. இங்கிருந்து யாரோ இதுபோன்ற புரளி கிளப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நடிகர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் சென்னையில் 342 மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல்கள் `டார்க் வெப்’ மற்றும் `விபிஎன்’ வழியே விடுக்கப்படுகின்றன.
இதுபோன்ற மிரட்டல்களில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருவதுபோல் தெரியவில்லை. இங்கிருந்து யாரோ செய்வதாகக் கருதுகிறோம். மிரட்டும் முறை, பயன்படுத்தும் வார்த்தை உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது ஒன்று அல்லது 2 பேர் மட்டுமே இதன் பின்னணியில் உள்ளனர். இருப்பினும் இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரிக்கின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். சென்னையில் ரவுடி பட்டியலில் 4,979 பேரை ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 ஆக வகைப்படுத்தி அவர்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இதனால், குற்றச் செயல்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
அதன்படி, கடந்தாண்டு 102 ஆக இருந்த கொலை நடப்பாண்டில் 82 ஆகவும், செயின் பறிப்பு 35-ல் இருந்து 21 ஆகவும், செல்போன் பறிப்பு 275-ல் இருந்து 144 ஆகவும் குறைந்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு காவல் ஆணையர் அருண் கூறினார்.
நடிகர் அஜித், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று வந்த இ-மெயிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு, ஜி.பி. சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீடு மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடு உட்பட 10 இடங்களைக் குறிப்பிட்டு அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மிரட்டலுக்குள்ளான இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகும் சந்தேகப்படும்படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, புரளியைக் கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.