பிற நாடுகள்…
வெனிசுலா மாதிரியே வட அமெரிக்காவிற்குக் குடைச்சல் கொடுக்கும் இன்னும் மூன்று தென் அமெரிக்க நாடுகள் கொலம்பியா, மெக்சிகோ, கியூபா.
நேற்று முன்தினம் (ஜனவரி 4), கொலம்பியா மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ட்ரம்ப் சிக்னல் கொடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக, ‘தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் எடுப்போம்’ என்று கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.
அடுத்தது, கியூபா.
“கியூபாவிற்கு இப்போது வருமானம் கிடையாது. அவர்கள் வெனிசுலாவின் எண்ணெயை வைத்து தான் வருமானம் ஈட்டி வந்தார்கள். அதனால், தற்போது கியூபா வீழ தயாராக இருக்கிறது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மெக்சிகோவையும் போதைப் பொருள் கடத்தலுக்கு சாடியுள்ளார்.
நீண்ட நாள்களாக குறி வைத்து வரும் கிரீன்லேண்ட் ‘மீண்டும் வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

இந்தியா பக்கம்…
அப்படியே தென் அமெரிக்கா, ஐரோப்பா பக்கம் சுற்றி, ஆசியாவின் இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்ரம்ப்.
அதாவது, ‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக்க வேண்டியது முக்கியம்.
அவர்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், நாம் இந்தியா மீதான வரியை இன்னும் உயர்த்துவோம்’ என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் இவை அத்தனையையுமே மதுரோவின் கைதிற்குப் பின் தெரிவித்துள்ளார். இது ஒரு வகையான பயமுறுத்தல் தான்.
‘நான் என்ன வேண்டுமானால் செய்வேன். அதனால், ஜாக்கிரதை’ என்பது தான் ட்ரம்பின் இந்த எச்சரிகைகளின் டோன்.