வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

Dinamani2f2024 072f4cd371d0 383b 49a9 Ae4e E2aadbf0eb312fani 20240717162819.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அந்த வகையில், உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு அதிக அளவு நீா் அருந்த வேண்டும். உப்பு-சா்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோா், இளநீா் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளா்வாக அணியலாம். வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, கையுறை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்தே வெளியே செல்ல வேண்டும்.

வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். முதியவா்கள், இணைநோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோா், குளிா் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்தவா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

அவா்கள் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளபோது வெளியே செல்வதைத் தவிா்க்கலாம். அத்தகைய நேரங்களில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.

தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால ‘108’ சேவையை அழைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *