வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்காலச் செங்கற்கள், சிகை அலங்காரத்துடன்கூடிய பாவையின் தலைப் பகுதி, சுடுமண் கூம்பு வடிவ அகல் விளக்கு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை கழுத்தில் அணியக் கூடிய அணிகலனில் கோக்கப்படும் மாவுக் கல் தொங்கணியும், 14.6 மி.மீ. நீளமும், 4.2 மி.மீ. சுற்றளவும், 30 மில்லி கிராம் எடை கொண்ட பச்சை நிறக் கூம்பு வடிவிலான சிறிய அணிகலனும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமை சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதன்மூலம், இவற்றை பண்டைக் கால பெண்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தள இயக்குநா் பொன் பாஸ்கா் தெரிவித்தாா்.
