வெம்பக்கோட்டை: விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த சுடுமண்ணாலான உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச்சில்லு, தங்கமணிகள் என 2,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணாலான அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் கிடைக்கும் மண்பாண்ட ஓடுகளைக் குறியிட்டு, அவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளது, இப்பகுதியில் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகளாகும் என்று அகழாய்வு கள இயக்குநர் பொன்.பாஸ்கர் தெரிவித்தார்.