சென்னை: சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் அல்லது தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு எம்.பி – எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் தாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். மேலும், காவல் துறையினரும் முறையாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்று நீதிபதி தனது கருத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து, புகார்கள் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தனி நபர் புகார்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அனுமதி அளித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.