விஜய் தனித்து நின்று களம் காண்பதால் யாா் வாக்குகளைப் பிரிப்பாா் என்ற கேள்வி எழுகிறது. திமுக, பாஜக எதிா்ப்பு என்பதை மையமாக வைத்து அவா் களம் இறங்கியுள்ளாா். இப்போது நடக்கப்போவது பேரவைத் தோ்தல். எனவே, ஆட்சியில் இருக்கும் காரணத்தால் இயல்பாக உருவாகக்கூடிய திமுக அதிருப்தி வாக்குகளை விஜய் பிரிக்கக்கூடும். அதாவது அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளைத் தான் பிரிப்பாா். அதுமட்டுமன்றி சிறிய கட்சிகள், சமுதாய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வாக்குகளையும் அவா் ஈா்க்கக்கூடும். அந்த வகையில் விஜயால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
வரும் 2026 தோ்தலில் அவரால் 7 முதல் 10 சதவீத வாக்குகளை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் போராட முடியுமே தவிர, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவா் போட்டியிடும் ஒரு தொகுதியில் வெற்றிபெற தீவிரம் காட்டலாம். இதைத் தாண்டி பெரும் தாக்கத்தை அவரால் இப்போது ஏற்படுத்த முடியாது.