இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார்.
மக்களவை உரையில் அவர் கூறியதாவது, குடியேற்றச் சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சட்டக் கட்டமைப்பாகக் கூறப்படும் இந்த மசோதா, அதிகப்படியான கட்டுப்பாடு, அடிப்படை உரிமைகள் பறிப்பு, தன்னிச்சையான முடிவெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் முதலானவற்றில் கேள்விகளை எழுப்புகிறது.
இந்த புதிய மசோதாவின் கடுமையான விதிகள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும். இது வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்தியாவை ஒரு கல்வி இலக்காக தேர்ந்தெடுப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்கள் கல்வி, மருத்துவ சிகிச்சை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதைக் கடினமாக்கும்.
மருத்துவ சுற்றுலா துறையில், இந்தியா ஒரு முன்னணி நாடாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறுவதை தடுக்கும் ஒரு சட்டம் உருவாக்கப்படுவது விரும்பத்தக்கதல்ல.
கடந்த காலத்தில் (2006) இந்தியக் கடவுச்சீட்டும் உலகத் தரவரிசையில் 71 ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், 2025-ல் 85 ஆவது இடத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்தியாவின் வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச இயக்கத் திறனில் பின்தங்கியுள்ளதைக் காட்டுகிறது. பிற நாடுகள் தங்கள் குடிமக்களின் பயணத்திற்கு வசதியான ஒப்பந்தங்களை வலுப்படுத்தும்போது, இந்தியாவின் இந்த வீழ்ச்சி, வணிகம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
உலகமயமாக்கலின் இந்தக் காலத்தில், வேலை, பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுலா, அகதி நிலை, அடைக்கலம் தேடுதல் அல்லது நாடற்ற நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த மசோதா இந்த சிக்கலான தன்மையை அங்கீகரிக்கவில்லை மற்றும் அதற்கான தீர்வுகளையும் இந்த மசோதா முன்வைக்கவில்லை. இந்த மசோதா, இந்தியாவில் அகதிகளின் நுழைவு மற்றும் ஒழுங்குமுறை குறித்து எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. இது அவர்களின் நிலை குறித்த நிச்சயமற்றத் தன்மையை மேலும் அதிகரிக்கிறது.
இந்த மசோதாவின் மாற்றங்கள், தற்போது இந்தியாவில் வாழும் 90,000 இலங்கைத் தமிழ் அகதிகளை கடுமையாகப் பாதிக்கும். இவர்களில் பெரும்பாலானோர் முப்பது ஆண்டுகளுக்கும்மேலாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். இதற்கு பரிந்துரையாக, இலங்கைத் தமிழ் அகதிகளை நீண்டகால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்குமேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கு பிறந்தவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!