பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு பஞ்சாப்பில் தங்களது கூட்டாளிகள் மூலம் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஒரு கபடி வீரர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது போன்ற காரணங்களால் மாநில அரசு வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் கிரிமினல்கள் மற்றும் அவர்களின் இந்திய கூட்டாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் 60 கேங்க்ஸ்டர்களின் 1,200 இந்திய கூட்டாளிகளை பஞ்சாப் அரசு அடையாளம் கண்டுள்ளது. இது தவிர வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் 60 கேங்க்ஸ்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் 600 பேரையும் பஞ்சாப் போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அதோடு அவர்கள் பஞ்சாப்பில் தங்கி இருக்கும் இடங்களையும் போலீஸார் கண்டுபிடித்து கண்காணித்து வருகின்றன்றனர்.

அவர்களில் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் கோல்டி பிரரின் பெற்றோர் சாம்சர் சிங், பிரீத்பால் கவுர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக உள்ளூர் குடும்பம் ஒன்று கடந்த ஆண்டு போலீஸில் புகார் செய்து இருந்தது. அப்புகாரின் பேரில் போலீஸார் முக்ஷார் மாவட்டத்தில் கோல்டி பிரர் பெற்றோரை கைது செய்துள்ளனர். 2022-ம் ஆண்டு பஞ்சாப் பாடகர் சிதுமூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு பொறுப்பேற்பதாக கோல்டி பிரர் வெளிப்படையாக அறிவித்தான். 2017-ம் ஆண்டு மாணவர் விசாவில் கனடாவிற்கு சென்ற கோல்டி பிரர் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடா என மாறி மாறி வசித்து வருகிறான்.
அவன் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் இருந்தான். ஆனால் கடந்த ஆண்டு முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறான். கடந்த 2024-ம் ஆண்டு அவனை மத்திய அரசு தீவிரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.