சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கான வரைவு அறிக்கையானது கால்நடை பராமரிப்புத்துறையால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “நாய்கள் இனப்பெருக்கம், வணிகம், விற்பனை ஆகியவை பெரியளவிலான வர்த்தகமாக நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான தொகைக்கு விற்பனை நடைபெறுகிறது. மரபு சாரா இனப்பெருக்கம் மூலம் குறைபாடுள்ள நாய்க்குட்டிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் மனித இனத்துக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்காகவே இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை, நெறி சார்ந்த இனப்பெருக்கம் , கண்மூடித்தனமான இனப்பெருக்கத்தை தவிர்த்தல், மரபு சார்ந்த பிரச்சினைகளுடன் குட்டிகள் பிறப்பதை தவிர்த்தல், தனித்துவமான பல்லுயிர் பாதுகாப்பு மதிப்புகளுடன் கூடிய நாட்டினங்களை பாதுகாத்தல், வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்தல், இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களை பதிவு செய்தல், இனப்பெருக்கம் செய்வோர் உரிமம் பெறுதல், நாய்களுக்கு சான்றிதழ் பெறுதல், நாய் இனப்பெருக்க ஏஜென்சிகளை கண்காணித்தல் போன்றவை இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் நாட்டினங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை மற்றும் கன்னி ஆகிய இனங்களை அங்கீகரித்தல், கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலை பட்டி, செங்கோட்டை நாய் ஆகிய இனங்களுக்கு அங்கீகாரம் அளித்து, அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, பாசெட் ஹவுண்ட் , பிரஞ்சு புல்டாக் , அலாஸ்கன் மலாமுட் , கீஷொண்ட் , சோ சோ, நியூஃபவுண்ட்லாந்து, நார்வேக்லான் எல்கவுண்ட் , திபெத்திய மாஸ்டிஃப் , சைபீரியன் ஹஸ்கி , செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்பம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை.
எனவே, அதுபோன்ற குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு கண்டிப்பாக தடை தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்க்க உள்ள குறிப்பிட்ட நாய்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழை விலங்குகள் நல வாரியம் வழங்கும். நாய்களுக்கான உரிமையாளர்கள் குறித்த விவரங்கள், விலங்குகள் நல வாரியத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நாய் வளர்ப்போர் அனைவரும் அதை வளர்க்கும் முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதன் மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.