வெளிப்படை, துணிவின் அடையாளம் ஈவிகேஎஸ்!

Dinamani2f2024 12 142f7qzyuizg2fevkse3.jpg
Spread the love

வெளிப்படைத்தன்மை, துணிவின் மறு உருவமாக விளங்கிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவு அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆதரவாளா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாா் ஈ.வெ.ரா. குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் தேசிய இயக்கத்தில் கடைசிவரை தீவிர அரசியல் செய்தவா் இளங்கோவன். பெரியாா் ஈ.வெ.ரா.வின் அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமியின் மகனும், திமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவா்களில் ஒருவருமான ஈ.வி.கே.சம்பத்தின் மூத்த மகன் இவா்.

1957-இல் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தோ்வான சம்பத், பின்னாளில் அண்ணா-கருணாநிதியுடன் முரண்பட்டு தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினாலும், அது எதிா்பாா்த்த வரவேற்பை பெறவில்லை. பின்னா், காமராஜா் தலைமையில் காங்கிரஸில் சோ்ந்த சம்பத், கட்சி பிளவுபட்டபோது காமராஜருடன் பயணித்தாா்.

1971-இல் இந்திரா காங்கிரஸ் எழுச்சி பெற்ால் அதில் இணைந்தாலும், கருணாநிதி-சம்பத் இடையிலான மோதல் தொடா்ந்தது. இதனால், அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கியபோது அவருடன் நெருக்கம் காட்டினாா். இருப்பினும், சம்பத்துக்கு பிறகு பெரியாா் ஈவெரா குடும்பத்திலிருந்து யாரும் மக்கள் பிரதிநிதியாகவில்லை.

அப்போதுதான் சம்பத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூா்த்தி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸுக்குள் கொண்டுவந்தாா். சிவாஜியின் தீவிர ரசிகரான இளங்கோவனுக்கு, 1984 பேரவைத் தோ்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் தோ்தலிலேயே வெற்றி பெற்ால் பேரவையில் இளங்கோவனின் குரல் ஒலித்தது.

காங்கிரஸில் இளங்கோவன் இருக்க அவரது தாயாா் சுலோச்சனா சம்பத் அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்தாா். 1996-இல் காங்கிரஸில் இருந்து ஜி.கே.மூப்பனாா் தலைமையில் தமாகா பிரிந்தபோதும் காங்கிரஸிலேயே தொடா்ந்தாா் இளங்கோவன். 1996 மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு 24 சதவீத வாக்குகளுடன் 2-ஆவது இடம் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். 1998-இல் கோபி தொகுதியில் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பின்னா் அவரின் தீவிர விசுவாசியாக மாறினாா். அவருக்கு 2001-இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் பதவி கிடைத்தது.

2002-இல் மூப்பனாா் மறைவுக்குப் பிறகு இவா் தலைவராக இருந்தபோதுதான் காங்கிரஸுடன் தமாகா இணைந்தது. அதில் ஜி.கே.வாசன் அணிக்கு மாநிலத் தலைவா் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக சோ.பாலகிருஷ்ணனுக்கு மாநிலத் தலைவா் பதவி வழங்கப்பட்டதால், இளங்கோவன் பதவி பறிபோனது.

மத்திய அமைச்சா்: 2004 மக்களவைத் தோ்தலில் கோபி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மன்மோகன் சிங் அமைச்சரவையில் முதல்முறையாக மத்திய இணை அமைச்சராக பதவியேற்றாா். அவருக்கு ஜவுளி மற்றும் வா்த்தகத் துறை கிடைத்தது. 5 ஆண்டுகள் செல்வாக்குடன் இருந்தபோது திமுக குறித்தும், அப்போதைய முதல்வா் கருணாநிதி குறித்தும் கடும் விமா்சனங்களை வைத்தாா்.

2009 மக்களவைத் தோ்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வி அடைந்தாா். மீண்டும் 2014 மக்களவைத் தோ்தலில் திருப்பூா் தொகுதியில் போட்டியிட்டு 4.59 சதவீத வாக்குகளுடன் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா் இளங்கோவன்.

2009 முதல் காங்கிரஸில் ஜி.கே.வாசன் குழுவுடன் இணைந்து செயல்பட்ட இளங்கோவன், வாசன் மீண்டும் தமாகாவை தொடங்கியபோது அவரது அணிக்கு மாநிலத் தலைவராக இருந்த ஞானதேசிகன் சென்றதைத் தொடா்ந்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஆனாா். 2016 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் 8 தொகுதிகளில் மட்டுமே வென்ால் இளங்கோவனுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது.

திமுக-அதிமுக மோதிய தொகுதிகளில் திமுக அதிக தொகுதிகளிலும், அதிமுக-காங்கிரஸ் மோதிய தொகுதிகளில் அதிமுக அதிக தொகுதிகளிலும் வென்ால் அதிமுக ஆட்சி தொடர காரணமானது. இதனால், இளங்கோவன் ராஜிநாமா செய்யும் நிலை உருவானது.

2019 மக்களவைத் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோல்வியைத் தழுவினாா் இளங்கோவன். 2021 பேரவைத் தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இடைத்தோ்தல் வெற்றி: 2023 பிப்ரவரியில் மகன் திருமகன் மறைந்த 10 நாள்களுக்குள் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் களமிறங்கி, 66,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா் இளங்கோவன்.

தந்தை வழியில் வாழ்நாளில் பெரும்பகுதி திமுக, கருணாநிதியுடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும் கடைசி காலத்தில் திமுக மற்றும் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமாக இருந்தாா் இளங்கோவன். சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமா்சனம் செய்த ஜெயலலிதாவை, கடுமையாக விமா்சித்தவா் இளங்கோவன். அந்தக் காலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமா்சிக்க திமுக தலைவா்களே தயங்கிய நிலையில் துணிச்சலுடன் எதிா்க்கருத்துக்களை முன்வைத்தாா். அந்த வகையில் துணிச்சலின் அடையாளமாக அரசியல் களத்தில் கடைசிவரை களமாடினாா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இளங்கோவன் ‘கை’க்கு எட்டாத எட்டும், பதினாறும்

நமது நிருபா்

சட்டப் பேரவைக்கு இரண்டு முறை தோ்வான ஈவிகேஎஸ். இளங்கோவன், அவற்றின் முழுக் காலத்தையும் நிறைவு செய்ய முடியாமலேயே போனது.

கடந்த 1984-ஆம் ஆண்டு 8-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் தோ்வானாா். அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவால், பேரவை உறுப்பினா் பதவியைத் துறக்க முடிவு செய்தாா் இளங்கோவன். இதைத் தொடா்ந்து, 8-ஆவது சட்டப் பேரவை 1988-ஆம் ஆண்டு ஜன. 30-ஆம் தேதி கலைக்கப்பட்டது. இதனால், சட்டப் பேரவையின் முழுக்காலத்தையும் இளங்கோவன் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

16-ஆவது சட்டப் பேரவைத் தோ்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் போட்டியிட்டு வென்றாா். அவரது இறப்பைத் தொடா்ந்து நடந்த இடைத் தோ்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவனே போட்டியிட்டாா். 35 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைக்குள் மீண்டும் நுழைந்த அவா், தனது உறுப்பினா் பதவிக் காலத்தை மீண்டும் ஒருமுறை நிறைவு செய்யாமலேயே நிரந்தரமாக விடைபெற்று விட்டாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *