இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி, இந்தத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பாததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கட்சியில் கரை கண்ட சீனியர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து வேட்பாளர்களாக்கியிருக்கிறது டெல்லி பா.ஜ.க தலைமை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு மயிலாப்பூருக்கு தமிழிசை செளந்திரராஜனும் நாகர்கோவிலுக்கு எம்.ஆர்.காந்தியும் வேட்பாளர்களாகியிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் இந்த வேட்பாளர் பட்டியல் சொல்வதென்ன?

பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலர் நம்மிடையே பேசுகையில், “பா.ஜ.க-வுக்கு சாதகமான தொகுதிகளை அ.தி.மு.க-விடமிருந்து கேட்டுப் பெறவில்லை என்கிற கோபம் கட்சிக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது. கிடைத்த தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்கள் இல்லை. திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போடுவதற்குள் தண்ணீர் குடித்துவிட்டது தலைமை. அதேசமயம், கட்சியிலுள்ள சீனியர்கள் பலரும் ஆளுக்கொரு பக்கம் லாபி செய்து தங்களுக்குத் தோதான தொகுதியைப் பெற்றுவிட்டார்கள்.
மயிலாப்பூர் தொகுதிக்கு தமிழிசை செளந்திரராஜன், கே.டி.ராகவன், எஸ்.ஜி.சூர்யா ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ராகவனுக்கும் சூர்யாவுக்கும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், ஜெ.பி.நட்டா தொடங்கி அமித் ஷா வரையில் பலரிடமும் லாபி செய்து மயிலாப்பூரை தட்டிச் சென்றுவிட்டார் தமிழிசை.
திருப்பத்தூரில் போட்டியிட மறுத்த கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாறனை பெரும்பாடுபட்டு சமாதானம் செய்து வேட்பாளராக்கியுள்ளனர். திருவாரூரில் போட்டியிட ‘நாராயிணி’ கார்த்திகேயனிடம்தான் முதலில் பேசினார்கள். அவர் மறுத்துவிடவே கோவி சந்துருவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மானாமதுரைக்கு ம.வெங்கடேசனும் பொன்.பாலகணபதியும் மோதிக்கொண்ட நிலையில், பாலகணபதிக்கு சீட் கிடைத்திருக்கிறது.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு ஏ.பி.முருகானந்தம் அல்லது காடேஸ்வரா தங்கராஜ் பெயர்கள்தான் பரிசீலிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றதும், ஏ.பி.முருகானந்தமும் சீட்டுக்கான ரேஸில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதனாலேயே, காடேஸ்வரா தங்கராஜ்க்கு சீட் கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மறுத்த ஜி.பி.எஸ்.நாகேந்திரனை, எல்.முருகன் தான் சமாதானம் செய்து போட்டியிட வைத்திருக்கிறார். முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வென்ற அவினாசி தொகுதியில் எல்.முருகன் களம் காண்கிறார்.
உதகை தொகுதியை, தன்னுடைய ஆதரவாளரான உமாதேவிக்குப் பெற்றுக் கொடுக்கத்தான் எல்.முருகன் விரும்பினார். அதற்கு, மாநில மையக்குழு கூட்டத்திலேயே பி.எல்.சந்தோஷ் தடை போடவும் எல்.முருகனின் திட்டம் தவிடுபொடியானது. கட்சியில் சீனியரான போஜராஜனுக்கு உதகை அளிக்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கும், வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமிக்கும் அண்ணாமலை கோட்டாவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனந்தன் அய்யாசாமிக்குத் தேவைப்படும் சகல உதவிகளையும், ‘ஜோகோ’ நிறுவனத் தலைவர் ச்ரிதர் வேம்பு செய்துத் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில், சீட் எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. வினோஜ் பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா, அமர் பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன் என்று பலருமே ஓரங்கப்பட்டுள்ளனர். தனக்கு சீட் வேண்டாமென அண்ணாமலையே ஒதுங்கிக் கொண்டுவிட்டார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்குத் தயாராகும் அண்ணாமலை, தேர்தல் நாளன்று கவுண்டம்பாளையம் தொகுதியிலுள்ள ஒரு பூத்தில், பூத் ஏஜெண்ட்டாக அமரவும் முடிவெடுத்திருக்கிறார்” என்றனர் விரிவாகவே.

வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துவிட்டாலும், அதில் ஆறு தொகுதிகளே சாதகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “அவினாசி, கோவை வடக்கு, வாசுதேவநல்லூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், மொடக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மயிலாப்பூர், ராசிபுரம், திருப்பூர் தெற்கு, புதுக்கோட்டை, மதுரை தெற்கு, ராமநாதபுரம், விளவங்கோடு தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், வெற்றியை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மயிலாப்பூரிலுள்ள பட்டியல் சமூகத்தினரும் மீனவர்களும் த.வெ.க., தி.மு.க ஆதரவு மனநிலையில் இருப்பது, தமிழிசைக்கு சவால்தான்.
தவிர, அந்தத் தொகுதியின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான அசோக், வேளச்சேரியில் போட்டியிடுகிறார். தன்னுடைய தொகுதியில் வெற்றிப்பெறுவதில்தான் அசோக் கவனம் செலுத்துவாரே ஒழிய, தமிழிசைக்காக இறங்கி வேலைப் பார்க்கமாட்டார். இதையெல்லாம் எதிர்கொண்டுதான் தமிழிசை வெற்றிப்பெற்றாக வேண்டும்.
ராசிபுரத்தில், சிட்டிங் அமைச்சர் மதிவேந்தனை எதிர்த்து வேட்பாளராகியிருக்கிறார் வி.பி.துரைசாமியின் மகன் பிரேம்குமார். அந்தத் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் த.வெ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த மும்முனைப் போட்டியில் வெற்றிப்பெற பிரேம்குமார் கடுமையாக உழைக்க வேண்டும்.
திருப்பூர் தெற்கு, புதுக்கோட்டை, மதுரை தெற்கு, ராமநாதபுரம் தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கென வாக்குவங்கி இருக்கிறது. அதேசமயம், கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் அங்கேயெல்லாம் வெற்றிக்குச் சாத்தியமில்லை. அ.தி.மு.க., அ.ம.மு.க வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எந்தளவுக்கு மடைமாறும் என்பதைப் பொறுத்துதான் வெற்றியை நிர்ணயிக்க முடியும்.

விளவங்கோட்டில் தனக்கென தனிச்செல்வாக்கு இருப்பதால் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் விஜயதரணி. ஆனால், அவர் தாமரை சின்னத்தில் களமிறங்குவதால், தொகுதியிலிருக்கும் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு குறைய வாய்ப்பிருக்கிறது. இது விஜயதரணிக்கு சவால்தான்.
சாத்தூர் தொகுதியே நயினாருக்கு சவால்தான். த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முக்குலத்தோரை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த நயினாரும் அங்கே போட்டியிடுகிறார். முக்குலத்தோர் வாக்குகள் பிரியும் நிலையில், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜூவை தி.மு.க வேட்பாளராக்கியிருக்கிறது. இந்த சமூக கணக்கில், நயினாருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் தொகுதிகளைத் தாண்டி வேறெந்த தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கு சாதகமானதாக இல்லை. மானாமதுரை, கந்தர்வக்கோட்டை, திருப்பத்தூர், தளி, ஆவடி தொகுதிகளில் மூன்றாமிடம் சென்றுவிடுவோமோ என்ற அச்சம் கட்சிக்குள் நிலவுகிறது” என்கிறார்கள் மிரட்சியுடன்.
பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலே வெளியிடத்தான் முதலில் ஏற்பாடானது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் சொதப்பல் என்று பல விஷயங்களிலும் அப்செட்டாகியிருக்கும் கோயல், பட்டியலை ஆன்லைனில் வெளியிடச் சொல்லிவிட்டாராம். டெல்லி எதிர்பார்த்த விதத்தில் வேட்பாளர்கள் இல்லாததால், பிரதமரை வைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமும் திடீரென ரத்தாகியிருக்கிறது.
புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் பிரதமர் மோடி, இன்றிரவு சென்னையில் தங்கவிருக்கிறார். தமிழக பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரையும் ஹோட்டலில் சந்திக்கவிருக்கிறார். அப்போது, அவரிடமிருந்து கடுமையான டோஸ் விழுமென இப்போதே அரண்டுகிடக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.