Last Updated:
கர்நாடகா மாநிலத்திலிருந்து பெங்களூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்காக வருவதால் ஊட்டி கேரட் சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து பெங்களூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்காக வருவதால் ஊட்டி கேரட் சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலை பயிர்களாக பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்படுகிறது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியின் தங்கம் என போற்றப்படும் ஊட்டி மலை கேரட் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு பகுதிகளில் கேரட் விளைச்சல் நடைபெற்றாலும் நீலகிரியில் விளையக்கூடிய கேரட் நிறம், சுவை, தரம் ஆகியவை அனைத்தும் தனித்துவமானதாக கருதப்படுகிறது. இதனால் பல்வேறு வெளிச் சந்தைகளில் இதன் மதிப்பும் பல மடங்காக உயர்ந்து நிற்கிறது.
இந்நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் இதன் விளைச்சல் குறைந்து விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிப்பகுதி சந்தைகளில் கேரட் விலை அதிகபட்சமாக 38 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து பெங்களூரு, கோலார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்காக வருவதால் ஊட்டி கேரட் மவுசு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாத காலம் நிலத்தில் பயிர் செய்து அதனை அறுவடை செய்து இயந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்து பல்வேறு பகுதிகளில் அனுப்பப்படுவதால் கூலி விலை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கேரட் வீணாகி கொட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, ஊட்டி கேரட்டுக்கு மவுசு அதிகரித்து விலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Feb 27, 2026 12:23 PM IST