சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
சென்னையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கோயம்பேட்டை சுற்றியும் மழைநீர் தேங்கியது. ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தது.
அசோக் நகரில் 10-வது நிழற்சாலை, 16-வது நிழற்சாலை, நடேசன் சாலை, பாரதிதாசன் காலனி, விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர், எம்எம்டிஏ காலனி பிரதான சாலை, கமலா நேரு நகர், மேற்கு மாம்பலம் லட்சுமி தெரு, ராஜாஜி தெரு, கிருபாசங்கரி தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு, ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெரு, பிருந்தாவன் தெரு, லட்சுமிநாராயணன் தெரு, துரைசாமி சாலை, கிரி சாலை, ராஜமன்னார் தெரு, ஹபிபுல்லா சாலை, கோபாலபுரம் முதல் தெரு, அவ்வை சண்முகம் சாலை, கே.கே.நகர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.
மேத்தா நகர் வட அகரம் சாலையில் மழைநீர் பெருமளவு தேங்கியதால் நெல்சன் மாணிக்கம் சாலையிலும் சூளைமேடு பகுதியிலும் தடுப்புகள் வைத்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் கனமழையால் தண்ணீர் பெருமளவு தேங்கியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
கூவம் ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஆர்ப்பரித்து ஓடியதால் மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே உள்ள நொளம்பூர் தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியில் போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு புறவழிச்சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலையை அடைய வேண்டிய கனரக வாகனங்கள் அடையாளம்பட்டு, மாந்தோப்பு சாலை, அயனம்பாக்கம் மற்றும் முகப்பேர் மேற்கு, நொளம்பூர் வழியாக திருப்பி விடப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூவம் கரையோரங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முக்கிய சாலைகளில் குளம்போல தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சித்ரகுளம் நிரம்பி வழிந்ததால், குளத்துக்கு செல்லும் வழிகள் மூடப்பட்டன. குளங்கள் முழுவதும் மூடுபனி படர்ந்திருந்தது. எழும்பரில் லட்சுமிபதி ருக்மணி சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி கிளம்பி தீப்பற்றி எரிய தொடங்கியது. தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் 7 தெருக்களில் நீர் தேங்கியது.
வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கீழ்க்கட்டளை பகுதிகள், பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலை, ராயபுரம் முனுசாமி தோட்டம், ஆண்டியப்பன் தெருக்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். பட்டாளம் பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி மழைநீர் தேங்கியது.
இதற்கிடையே, ராயபுரம், தியாகாராயநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் மேம்பாலங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். புளியந்தோப்பில் உள்ள அரசு மதுபானக் கடையில் குவிந்த மக்கள் கூட்டம், சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியது. மேலும், ஆபத்தை உணராமல் கடற்கரையில் கபடி விளையாடியது, புயலை வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களிலும் மக்கள் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்பாடுகளாலும் மழைநீர் தேங்கியதாலும் மெரினா கடற்கரை லூப் சாலை மூடப்பட்டது.