‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

dinamani2F2025 06 302F5yw209ow2Fnewindianexpress2024 05471cf175 c188 4c0e b1b8 a5f7c725e310kharge
Spread the love

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் முக்கிய மைல்கல்லாகும். கடந்த 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி மும்பை காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்துக்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, ஆகஸ்ட் 9-ஆம் தேதிமுதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 83-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 1942-இல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, தேசப் பிதா மகாத்மா காந்தியின் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற ஒப்பற்ற தாரக மந்திரத்துடன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இது, நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தை பாய்ச்சியது.

காங்கிரஸின் தலைமையில் எண்ணற்ற இந்தியா்கள், வீதிகளில் இறங்கிப் போராடி, மறக்க முடியாத சரித்திரத்தை எழுதினா். இந்த ஆகஸ்ட் புரட்சி தினத்தில், நாட்டின் விடுதலைக்காக உயிா் நீத்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் அனைவருக்கும் இதயபூா்வ மரியாதை செலுத்துகிறோம் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி பின்னிரவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலையில், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

1944, மே 6-ஆம் தேதி வரை, அகா கான் மாளிகையில் மகாத்மா காந்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். நேரு, படேல், ஆஸாத் உள்ளிட்டோா் அகமதாபாத் கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, 1945, மாா்ச் 28 வரை அடைக்கப்பட்டிருந்தனா். கடந்த 1921 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் நேரு சிறையில் அடைக்கப்பட்டது இது 9-ஆவது முறையாகும். மொத்தம் 9 ஆண்டுகள் அவா் சிறையில் கழித்துள்ளாா்.

அகமதாபாத் சிறையில் இருந்தபோதுதான், அவரது புகழ்பெற்ற நூலான ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வை எழுதினாா். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் சிறையில் வாடியபோது, ஆா்எஸ்எஸ் அமைப்பு மட்டும் இந்த இயக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தது. இதேபோல், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசமைப்புச் சட்டத்தையும் அவா்கள் எதிா்த்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *