49-வது சென்னை புத்தகக் காட்சி ஒரு வாரத்தைக் கடந்து தற்போது நிறைவடைந்துள்ளது. வாசகர்களின் நிறைவு கட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக வேங்கைநேரி நாவல் வெளியீட்டின் மூலம் எழுத்தாளராக எழுத்து உலகில் அறிமுகமாகி இருக்கும் சிலம்பக்கலை பயிற்றுநர், இளம் எழுத்தாளர் நிகேஷைச் சந்தித்துப் பேசினோம். நம்மிடம் தனது எழுத்துலக அனுபவங்கள் குறித்து நிகேஷ் பகிர்ந்து கொண்டார்.
“பத்து வயதில் சிலம்பப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயிற்சி பெற்று தற்போது 8 வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் சென்று இலவசமாக சிலம்பம் பயிற்சி அளித்து, சிலம்பம் பயிற்றுநராக வலம் வருகிறேன்.
கல்லூரி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்ட நான், பயிற்சி காலக்கட்டத்தில் மாற்று ஊடக மையத்தின் இயக்குநரும், நாட்டுப்புறக் கலைஞருமான முனைவர்.காளீஸ்வரன் அவர்களைச் சந்தித்தபோது எனது நிலையைக் கூறினேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணரவைத்த அவர், நான் மீண்டும் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காரணமானார்.
சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ் இலக்கிய துறையில் இணைந்த சமயத்தில், கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கிய பிரிவில் இணைந்தேன். அங்குதான் விளிம்பு நிலை மக்கள்மீது நடத்தப்படும் வன்கொடுமைகள், அரசியல் மீதான பார்வையும் தெளிவும் ஏற்பட்டது.

அப்போது நான் படித்த, ஜி. கல்யாண ராவ் எழுதிய “தீண்டாத வசந்தம்” என்ற புத்தகம் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் வலிகளை எனக்குள் கடத்தியது. அதன் பிறகு சமூகத்தில் நிலவும் ஆணவப் படுகொலைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் நிகழும் இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து மக்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன்.
முதுகலையில் இதற்காகவே இலயோலா கல்லூரியில் எண்ம ஊடகவியல் ( Digital Journalism) துறையில் இணைந்தேன். சமூகத்தில் நடைபெறுவதை எழுத்தின் வழியாகவும், காட்சிப்பதிவியல் வழியாகவும் ஆவணமாக்க வேண்டும் என்று காளீஸ்வரன் ஐயா கூறியதையடுத்து ஆவணப் படங்கள் எடுக்க தொடங்கினேன்.
மனதை உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்..!
இதழியல் துறை மாணவராக இருந்தபோது வேங்கைவயல் கிராமத்தில் தலித்துகள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பு செய்தியானது.
கிராமத்திற்கே நேரில் சென்று காவல்துறையின் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் அம்மக்களோடு தங்கி, அவர்களின் வலியை ஆவணப் படமாக்கி இலயோலா கல்லூரியில் திரையிட்டேன். பல்வேறு தரப்பினரும் எனது முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

அடுத்ததாக நாங்குநேரியில் வீடு புகுந்து மாற்றுச் சமூக மாணவர்களால் பட்டியலின மாணவர் சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவத்தின்போதும், அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து அவருக்கு நேர்ந்த கொடுமைகளை எழுத்து மற்றும் ஒலி வடிவில் செய்திகளாகத் திரட்டினேன்.
காளீஸ்வரன் ஐயா உந்துதல் காரணமாக இதை எழுத்தாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எட்டு மாதக் கால உழைப்பிற்குப் பின்னர் இது மாத இதழில் புத்தகமாக மாற்று ஊடக மையத்தின் மூலம் அப்போதைய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நூலகத்திற்கு கொண்டு செல்ல இதை பதிப்பகத்தின் மூலம் விரைவு தகவல் குறியீட்டுடன் கூடிய (QR Code) பதிப்புரிமை பெற்ற புத்தகமாக வெளியிடுமாறு கூறினார். தொடர் போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் அந்த நூல் வெளியிடப்பட்டது.
எதைப் பற்றியது “வேங்கைநேரி’ புதினம்?
இந்தப் புத்தகம் வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி சம்பவத்தை மையப்படுத்தியும், பல கிராமங்களுக்குச் சென்றபோது அந்த மக்களின் வாழ்நிலையையும், காதல், காமம், கல்வி நிலை, ஒடுக்கப்பட்டவர்களிடம் இல்லாத ஒற்றுமையின்மை, போதையால் ஏற்படும் சீரழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து எழுதியிருக்கிறேன்.

எழுத்தாளர் அடையாளம் எப்படி இருக்கிறது..?
பொன்னேரி அருகே ஒரு சிறு கிராமத்திலிருந்து ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து படிப்பறிவற்ற குடும்பப் பின்னணியிலிருந்து இன்று ஓர் எழுத்தாளராக எழுத்துலகில் காலடி எடுத்து வைத்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த எனது வேங்கைநேரி புத்தகத்தை படித்த அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், என்னைத் தொடர்பு கொண்டு `புத்தகத்தின் எழுத்துகள் என் கண் முன்னே நிழலாடுகின்றன’ என்றும், `என்னால் முயன்ற உதவிகளை உங்களுக்கு செய்ய தயாராகவே இருக்கிறேன்’ எனவும் ஒரு மணி நேரம் பேசியது, எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த நகர்வாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவில் நடந்த கொடுமைகளைப் பற்றிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அடுத்த புத்தகம் எழுத ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன்” என்றார்.
எழுத்துப் பணிகள் தொடர வாழ்த்துகள், நிகேஷ்!!!