‘வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி சுதந்திரமாக விசாரிக்கவில்லை’ – மனுதாரர் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு | CBCID not independently investigate Vengaivayal case petitioner allegations

1355935.jpg
Spread the love

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “இந்தச் சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்” என்றார்.

அப்போது தமிழக அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, ‘‘தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த விசாரணையில் திருப்தியில்லை என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோருகிறோம். வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒருநபர் ஆணையமும் தனது இறுதி அறிக்கையை இதுவரையிலும் தாக்கல் செய்யவில்லை.

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக சிபிசிஐடி போலீஸார் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கை சுதந்திரமாக, சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை நீக்கி காலதாமதமாக குறைபாடுடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 12-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *