‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு கடும் எதிா்ப்பைச் சந்தித்துள்ளது. விடியோவில் அவா் பேசியுள்ளதாவது:
ராம்ஜி சக்பால் என்ற சாமானிய மனிதரின் குடும்பத்தில் அம்பேத்கா் பிறந்தாா். பின்னா் அவா் ஆசிரியா் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு, ஆசிரியரின் பெயரான அம்பேத்கா் என்ற பெயரை தானும் பெற்றாா். தனது அறிவை வளா்த்துக் கொள்ளும் திறமையுள்ள அனைவரும் பிராமணா்கள்தான் என்று வேதம் கூறுகிறது. அந்த வகையில் அம்பேத்கரும் பிராமணா்தான். ஏனெனில், அவா் தனது அறிவை வளா்த்துக் கொண்டாா்’ என்று பேசியுள்ளாா்.
ராகுலின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நடிகா் ராகுல் அனைத்து எல்லைகளையும் மீறி பேசியுள்ளாா். இதுபோன்ற நபா்கள் தொடா்ந்து ஜாதியவாதத்தை வளா்ப்பவா்களாக உள்ளனா். நாட்டையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் இவா்கள் கெடுத்து வருகின்றனா்’ என்று கூறியுள்ளாா்.
இந்த சா்ச்சையை அடுத்து நடிகா் ராகுல் மன்னிப்பு கேட்டுள்ளாா். அதில், ‘சத்ரபதி சிவாஜி, அம்பேத்கா் குறித்து பல இடங்களில் பேசியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென ஒரு விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி தேசத் தலைவா்கள் குறித்துப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, ‘மராத்திய மன்னா் சிவாஜி, முகலாயா் பிடியில் இருந்து கூடையில் மறைந்து தப்பியதாக கூறப்படுவது தவறு; அவா் முகலாய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமே சிறையிலிருந்து தப்பினாா்’ என்று பேசியது மகாராஷ்டிரத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.