இதையடுத்து, 25-8-2023 அன்று மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி என்பவரால் அவசர, அவசரமாக சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் டிசம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், “வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட முதல்நிலைக் காவலர்கள் வரையிலான 6 போலீஸாரும், தங்களின் கடமைகளை செய்யத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமியிடமே மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொள்ளும் விவரிக்க முடியாத துன்பத்திற்கும், மன வேதனைக்கும் பண இழப்பீடு மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்பது, இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால், சில நேரங்களில், அது ஒரு சரிசெய்யும் நடவடிக்கையாகவும், ஒரு குடிமகனின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசு ஊழியர்களால் மீறப்பட்டதற்கு பரிகாரம் தேடும் ஒரு தீர்வாகவும் இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். மேலும், இவர்கள் 6 பேர் மீதும் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறுமி பாதிக்கப்பட்ட `குற்ற எண் 20/2022’ வழக்கை, டி.எஸ்.பி பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியைக் கொண்டு மறுவிசாரணை செய்து, 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது’’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.