வேலூர் – சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில் டிஜிபி ஆய்வு: 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி | DGP Inspection of Vellore-Salem Police Training Schools

1341948.jpg
Spread the love

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளது. இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ள வேலூர், சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில், காவல்துறை பயிற்சி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர்கள் 2,665 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்த போலீஸாருக்கு 7 மாதகால அடிப்படை பயிற்சியும், ஒரு மாதகால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும்.

இப்பயிற்சியானது திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பெண் ஆயுதப்படை காவலர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரத்திலும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்களுக்கு மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி மற்றும் கோவையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பயிற்சி காவலர்களுக்கு நாளை (டிச.4) முதல் பயிற்சி தொடங்க உள்ளது. இந்நிலையில், தமிழக காவல் துறையின் காவல் பயிற்சி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வேலூர் மற்றும் சேலம் காவல் பயிற்சி பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயிற்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பயிற்றுநர்களுக்கு பயிற்சி: போலீஸாருக்கு பயிற்சி அளிக்க உள்ள பயிற்றுநர்களுக்கான பயிற்சி முதல்முறையாக மதுரை காவல் பயிற்சி பள்ளியில் நவ.25 முதல் 30-ம் தேதி நடத்தப்பட்டது. பயிற்சி காவலர்களுக்கு பயிற்சியை திறம்பட நடத்துவதற்கும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 158 உட்புற மற்றும் வெளிப்புற காவல் ஆளிநர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *